சென்னை: நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சார்பாக, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி, முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தேசியக் கொடியை ஏற்றும்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. முன்னதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார். பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநருக்கு முப்படை தளபதி மற்றும் காவல் துறை உயர் அலுவலர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து விழாவில் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகிய விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த விழாவில் முப்படை வீரர்கள், காவல் துறை சிறப்புப் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர், சிற்பி படைப்பிரிவு, உள்ளிட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
இந்த வருடம் பெண்கள் சிறப்புக் காவல் படையின் கூட்டுக்குழு முரசு இசை நிகழ்ச்சியானது சேர்க்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளின் மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் ஆட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்பட பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் அரங்கேறியது. மேலும் ராஜஸ்தான் - குல்பாலியா நடனம், மகாராஷ்டிரா - கோலி நடனம் (மீனவர்), அசாம் - பாகுரும்பா நடனம் போன்ற பிற மாநில கலைகளும் நடத்தப்பட்டது.
மேலும் தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் சார்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. முக்கியமாக ‘தமிழ்நாடு வாழ்க’ என்ற அலங்கார ஊர்தி ஆளுநர் முன்பாக அணி வகுத்துச் சென்றது. இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், துர்கா ஸ்டாலின், ஹெச். ராஜா உள்பட 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 74th republic day: தமிழ்நாடு அரசு விருது பெற்றவர்கள் விபரம்