தமிழ்நாட்டில் ஈழ விடுதலை என்பது எப்போதும் உணர்வுபூர்வமான ஒன்றாக இருந்துவருகிறது. ஈழத் தமிழர்களுக்காகவும், எழுவர் விடுதலைக்காகவும் தமிழ்நாட்டில் பலர் உயிரை தியாகம் செய்துள்ளனர். ஆனால், இவர் ஒருவரின் தற்கொலை சம்பவம் இந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள். 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த செங்கொடியின் தீக்குளிப்பு தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போதுதான், யார் இந்த செங்கொடி எனப் பலர் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கான பதில் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் கிடைத்தது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் எழுப்பிவரும் அமைப்புகளில் காஞ்சிபுரம் மக்கள் மன்றமும் ஒன்று. இங்கிருந்து ஒலித்த ஜனநாயக குரல்தான் செங்கொடி.
சிறுவயதிலிருந்து மக்கள் பிரச்னைகளில் ஆர்வம் காட்டிவந்த செங்கொடி பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர் ஆவார். காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் ஈழத் தமிழர்கள் அனுபவிக்கும் துன்பங்களை பறையாட்டம் மூலம் மக்களிடையே கொண்டுச் சேர்ப்பவர் செங்கொடி. இப்படிப்பட்ட இவர் தீக்குளிப்பதற்கு முக்கிய காரணம் குடியரசு தலைவரின் அந்த செயல். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் நிராகரித்தார். எப்போது வேண்டுமானாலும் எழுவரும் தூக்கில் போடப்படுவார்கள் என்ற நிலையில், தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியது. இதனைத் தொடர்ந்து செங்கொடி வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று மண்ணெண்ணெயை ஊற்றி பற்ற வைத்து தீக்குளித்தார். கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நிகழ்த்திய தாக்கம் என்பது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. ராஜீவ் காந்தி கொலையில் சிறையில் இருக்கும் எழுவரின் விடுதலைக்கு ஆதரவாக, தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தியது. 2009ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டபோது, முத்துக்குமார் என்ற இளைஞன் சாஸ்திரி பவன் முன்பு தீக்குளித்து தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இது தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான அனைத்து அமைப்புகளையும் ஒன்று சேர்த்தது. தன் தற்கொலை எழுவர் விடுதலைக்காக அனைவரையும் ஒன்று சேர்க்கும் என அவர் நினைத்திருந்தார் போல, இது அவர் எழுதிவைத்திருந்த கடிதம் மூலம் ஊர்ஜிதமானது. தீக்குளிப்பதற்கு முன்பு செங்கொடி எழுதிய கடிதத்தில், "தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழ்நாட்டை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்" என உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டிருந்தார்.
ராஜீவ் படுகொலை என்பது சர்வதேச சூழ்ச்சிகளில் நடந்தது என பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா கூறுகிறார். வழக்கின் விசாரணையில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக அந்த வழக்கினை விசாரித்த சிபிஐ அலுவலர் ரகோத்தமன் கூறுகிறார். இப்படி மர்மங்களின் முடிச்சுகளில் சூழ்ந்திருக்கும் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எழுவர் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் தங்களின் வாழ்க்கையையே இழந்துள்ளனர். செங்கொடிக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது மனிதர்களாய் ஒன்றிணைந்து, எழுவரின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதே...!