சீக்கிரம் இயேசு பூமிக்கும் வரப்போகிறார் என்று கூறாத கிறிஸ்தவ பாஸ்டர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏன் யாருமே இல்லை எனக் கூட கூறலாம். அந்த அளவிற்கு அவர்கள் அனைவரும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இயேசுவின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
கிறிஸ்தவ சபைகளிலும் பொதுவெளிகளிலும் கூறிவந்த பாஸ்டர்கள் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்திலும் அந்த போதனையை ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி ஒரு சம்பவம்தான் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜான் (50). இவர் வடபழனியில் உள்ள ஃபுல் காஸ்பல் சபைக்குச் சென்று வருகிறார். இவர் குருத்தோலை ஞாயிறுக்கு அனுமதி பெறுவதற்காக இன்று காவல் ஆணையர் அலுவலகம் வந்தார்.
அப்போது யார் மீதோ புகாரளிக்க வந்த நபரின் அருகில் ஜான் சென்றுள்ளார். அவரைப் பார்த்து, “ஆணையரிடம் புகாரளித்தால் உங்களுடைய பிரச்னை தீராது, இயேசு மட்டுமே தீர்ப்பார். அவர் பூமிக்கு மிக விரைவில் வருவார்” என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு திகைத்துப்போன அந்நபர், தப்பித்தால் போதும் என்று நினைத்து அந்த இடத்தைக் காலி செய்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றவே செய்தியாளர்கள் ஜானிடம் மைக்கை நீட்ட அவர், இயேசுதான் இந்தியாவின் தீர்வு எனவும், அவரது வருகை சமீபமாக இருப்பதால் அனைவரும் இயேவை தேடி வாருங்கள் என்றும் கூறினார்.
அதுமட்டுமின்றி இயேசு அனைவருக்காக ரத்தம் சிந்தி பலியானார் என்றும் ஆகையால் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அவரை நம்புங்கள் எனவும் தெரிவித்து அனைவரும் ஆயத்தமாய் இருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார். தகவலறிந்து அங்கு வந்த வேப்பேரி காவல் துறையினர் ஜானை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ஆந்திரா ரேஷன் கார்டில் 'இயேசு' புகைப்படத்தால் சர்ச்சை!