சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் அபூபக்கர், பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபூபக்கர், "நன்கு படிக்கக்கூடிய மாணவியான பாத்திமா, பல்வேறு மாநிலங்களில் படிக்க வாய்ப்பு இருந்தபோதிலும், தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்று கருதியே, விருப்பப்பட்டு சென்னை ஐஐடியில் சேர்ந்தார். அவரது தற்கொலைக்கு பேராசிரியர்களின் மதரீதியான தாக்குதலே காரணம். இது குறித்து திமுக தலைவரிடம் கூறினோம். அவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக சார்பில் அழுத்தம் தரப்படும் என்று உறுதி அளித்துள்ளார்" என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், நாளை மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'சுதர்சன் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என்பதே தனது வேண்டுகோள்' - அப்துல் லத்தீஃப்