சென்னை: திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் ஜூலை மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதனால், உணவகம், காய்கறி, பூ சந்தைகள், மளிகை பொருள்கள் என்று எல்லாம் தடைபடுகிறது. வீட்டை விட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள் உணவகத்தை நம்பிதான் வாழ்கின்றனர். அவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன், அப்போது நடைபெற இருந்த திருமணங்கள் எல்லாம், ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டன. ஆகஸ்டு மாதத்திலும், செப்டம்பர் மாதத்திலும் பல சுபமுகூர்த்த தினங்கள் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், திங்கட்கிழமைகளில் திருமணங்களை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
நாதஸ்வரம், பூ என்று திருமண ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியவில்லை. எனவே, ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகம், மெஸ், பெட்ரோல் நிலையங்கள் செயல்படவும் அனுமதிக்க வேண்டும். வருகிற 30ஆம் தேதி, (ஞாயிற்றுக்கிழமை) 24 மற்றும் 31 ந்தேதிகள் (திங்கட்கிழமை) சுபமுகூர்த்த தினங்கள் என்பதால், திருமணம் நடத்தவும், திருமணம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் பொதுமக்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கவேண்டும்.
சுபநிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதற்காக வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கவேண்டும். இதற்காக ஊரடங்கில் தளர்வு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தொடர்வது தொடர்பாக முதலமைச்சர் வருகிற 29ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளார். எனவே இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பொருத்து இந்த வழக்கை விசாரணை எடுக்கலாம் என்று கருத்து தெரிவித்து, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.