இ-பாஸ், ஊரடங்கு ஆகியவற்றிற்கு தளர்வு அளிக்கக்கோரி இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் மாநிலத் தலைவர் சி.என். ராஜா, மாநிலச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், "கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய 85 விழுக்காடு பேர் எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள். அவர்களால் மேலும் நோய்ப் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, கரோனா பரிசோதனையைத் தொடர்ந்து செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இன்னும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மையங்கள் இல்லாமல் இருக்கிறது. அப்படியே கரோனா பரிசோதனை எடுத்த பின்பும் சோதனை முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும், செவிலியரும் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர். இந்திய மருத்துவ சங்கம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில், ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனையில் பாசிட்டிவால் 32 மருத்துவர்களும், சோதனையில் நெகட்டிவ் வந்தும் 15 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை அரசுக்கு அவ்வப்போது தெரிவித்து வருகிறோம்.
கரோனாவிற்கு எதிரானப் போரில் அரசு, தனியார் மருத்துவர்கள் என அனைவரும் களத்தில் உள்ளனர். கரோனாவை நேரடியாக எதிர்த்து போராடி உயிரை இழக்கும் மருத்துவர்களுக்கு தகுந்த மரியாதை கிடைப்பதில்லை. கரோனா காரணமாக, இறந்த அனைத்து மருத்துவர்களுக்கும் அரசு உரிய மரியாதை அளிக்க வேண்டும். முதலமைச்சர் அறிவித்த ரூபாய் 50 லட்சம் இழப்பீட்டுத் தொகையை அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் குடும்பங்களுக்கு விரைவில் அளிக்க வேண்டும்.
ஆர்டிபிசிஆர் சோதனையில் தொற்று இல்லை என வந்தாலும்; மற்ற அறிகுறியால் உயிர் இழந்தவர்களையும் கரோனோ உயிரிழப்பில் சேர்க்க வேண்டும். மருத்துவர்கள் செய்யும் சேவையைப் பாதிக்கும் வகையில் பொதுமக்கள் அவர்கள் மனம் புண்படும்படியான கருத்துகளை வெளியிடக் கூடாது.
மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்களிடம் அலுவலர்கள் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. கிராமப்புற, நகர்ப்புறங்களுக்கு செல்வதற்கான இ-பாஸ், ஊரடங்கு ஆகியவற்றில் தளர்வுகள் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்? - மருத்துவர்கள் சங்கம் கேள்வி