சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் இன்று (நவ.23) செய்தியாளர்களை சந்தித்த அம்மையத்தின் இயக்குநர் புவியரசன் (Regional Meteorological Center chennai Director Puviarasan), "தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.
ஏனைய தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (நவ.24) மழை நிலவரம்
திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவோ, புயலாக மாற வாய்ப்பில்லை. இதன் காரணமாக மழை அளவு அதிகரிக்கும், தரைகாற்று வீசக்கூடும்" என தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) தமிழ்நாட்டில் 64% கூடுதலாகவும், சென்னையில் இயல்பை விட 66% கூடுதலாக மழை பதிவாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'மழை வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும்'