இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2018 - 2019ஆம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் 2020 பிப்ரவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற்றது.
இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாள்கள், அதற்கு அவர்கள் அளித்த விடைகளையும் தங்களின் யூசர் ஐடி, பாஸ்வேர்ட்டைப் பயன்படுத்தி www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் 14,15,16 ஆகிய தேதிகளில் காலை, மாலையில் தேதி வாரியாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்தப் பருவத்தில் கணினி தேர்வினை எழுதினார்களோ அதற்குரிய விடைக்குறிப்புகளோடு வெளியிடப்படவுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக் குறிப்பிற்கு மறுப்பு தெரிவிக்கும்போது அதற்குரிய சான்று ஆவணங்களை இணைக்க வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள், தொலைதூரக் கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள், ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அஞ்சல் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'செய்யூரில் பழுதடைந்த மின்மாற்றியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'