சென்னை: 'பப்ளிக் பவுண்டேசன்'என்ற அமைப்பின் சார்பில் சென்னையில் 12 இடங்களில் இலவச உணவு குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்சாதன பெட்டியில் விருப்பம் உள்ளவர்கள் உணவு பொருட்களை வைத்து செல்லலாம். உணவு வேண்டுவோர் எந்தவொரு நிபந்தனையும் இன்றி அதிலிருந்து உணவு எடுத்து கொள்ளலாம்.
இந்நிலையில் எண்ணூரில் தெருவோர வாசிகள், ஏழைகள் பயன்பெறும் வகையில் உணவு குளிர்சாதன பெட்டி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து 'ஐயமிட்டு உண்' என்ற பெயரில் ஒரு லட்ச ரூபாய் செலவில் எண்ணூர் பர்மா நகர் பேருந்து நிறுத்தம் அருகே உணவு குளிர்சாதன பெட்டி அமைக்கப்பட்டது.
இதற்காக நடைபெற்ற திறப்பு விழாவில் எண்ணூர் காவல் ஆய்வாளர் கிளாஸ்டின் டேவிட், பர்மா நகர் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். இலவச உணவு குளிர்சாதன பெட்டியை பள்ளி சிறுமி ஒருவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த பெட்டியில் சீலிடப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், உலர்ந்த ரொட்டிகள், உலர் திண்பண்டங்கள், காய்கறி, பழங்கள், வீட்டில் சமைத்த உணவுகள், அடுமனை உணவுகள், பொட்டலத்தில் கட்டப்பட்ட உணவுகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
எளிதில் கெட்டு போகும் உணவுகள், காலாவதியான உணவுகளை வைக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் ஏழு நாட்களும் உணவின்றி தவிப்போருக்கு பயன்படும் வகையில் இந்த குளிர்சாதன பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.