மத்திய அரசு அறிவித்தபடி தமிழ்நாட்டில் சீர்மரபினர் கணக்கெடுப்பை நடத்தக்கோரி முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும் எம்எல்ஏவுமான கருணாஸ் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்தினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசியதாவது, "தமிழ்நாட்டில் நாடோடிகள் என அழைக்கப்படக்கூடிய குறவர்கள், குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மறவர்கள், கள்ளர்கள், கவுண்டர்கள், காட்டு நாயகர்கள், குறவர்கள் உள்ளிட்ட 68 சமுதாய பிரிவினர்கள் சீர்மரபினர் என்று அழைக்கப்படுவார்கள்.
இவர்களுக்கான கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க அறிவுறுத்திய நிலையில் தமிழ்நாட்டில் சீர்மரபினர் கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
இந்தக் கணக்கெடுப்பு நடத்துவதால் பிற சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சீர்மரபினர் கணக்கெடுப்பு நடத்தப்படாததால் அதில் இருக்கக்கூடிய 68 சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரிடம் தெரிவித்தேன். அவர்கள் கணக்கெடுப்பு எடுப்பதாக உறுதியளித்தனர்" என்றார்.
இதையும் படிங்க: விரைவில் திரையரங்கம் திறக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கை