இது தொடர்பாக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்.பி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு எனது தலைமையில் புதிதாக வக்பு வாரியம் அமைக்கப்பட்டதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துகளை மீட்கவும், வக்பு சொத்துகளை விற்பனை செய்து விடாமல் தடுக்கவும் தீவிர முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு பட்டியல் அளிக்கப்பட்டு பத்திரப்பதிவு மூலம் வக்பு நிலங்கள் விற்பனையாகாமல் தடுக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு வக்பு சொத்துக்களை மீட்கும் முயற்சியில் திண்டுக்கல் பேகம்பூர் மஸ்ஜிதுக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான 65 ஏக்கர் நிலம், திருச்சி ஹஜரத் நபி ஸல் பாத்திஹா வக்புக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான நிலம், தூத்துக்குடி ஜாமிஆ மஸ்ஜிதுக்கு பாத்தியப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான அரிசி ஆலை, விழுப்புரம் வளவனூரில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலம், நாகூரில் ரூ.4 கோடி மதிப்பிலான தர்காவுக்கு பாத்தியப்பட்ட நிலம் போன்ற பல ஏக்கர் வக்பு நிலங்கள் இந்த ஒரு வருட காலத்தில் மீட்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா மேல்விஷாரம் நகரில் நெடுஞ்சாலையை ஒட்டி 16 சர்வே எண்களில் 31.61 ஏக்கர் நிலம் புட்டி பேகம் சாகிபா சவுத்ரி வக்புக்கு சொந்தமானது. இது தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில் ரூ.17 கோடி மதிப்பிலான இரண்டு ஏக்கர் நிலங்களை தனி நபர்கள் விற்பனை செய்ய முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததும் அதை தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு வக்பு வாரியம் இறங்கியது. சம்மந்தப்பட்ட ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஒத்துழைப்புடன் வக்பு நில மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது பற்றிய தகவல்கள், தமிழ்நாடு வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் மூலம் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை அரசு முதன்மை செயலாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் தமிழ்நாடு வக்பு வாரிய நடவடிக்கையை பாராட்டியதோடு, ஆக்கிரமிப்பு மற்றும் விற்பனைக்கு முயன்ற நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அந்த நடவடிக்கைகள் விரைவில் நடைபெறும்.
வக்பு சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருப்போர் அவர்களாகவே அவைகளை விட்டு விலகிக்கொள்ள வேண்டும். அதனை கைமாற்றம் செய்ய முயன்றால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Happy Street: சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து மாற்றம்