சென்னை சேத்துப்பட்டில் உள்ள கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், புதிதாக வாங்கப்பட்ட வாகனத்தின் சாவியை அதன் ஓட்டுநருக்கு கொடுத்தார். கட்டுமான தொழிலாளர்கள் உறுப்பினர்களுடன் ஆய்வு நடத்தினார்.
மத்திய அரசின் கட்டுமான தொழிலாளர்களுக்கான மாதிரி நலத்திட்டம் அடிப்படையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகைகளை உயர்த்தி வழங்கவும், மகப்பேறு உதவித் தொகையினை ஆறாயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும், திருமண உதவித்தொகை 50 ஆயிரமாக உயர்த்தவும் பரிந்துரை செய்ய வாரியத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
2017ஆம் ஆண்டு மே முதல் 2020 பிப்ரவரி வரை கட்டுமான தொழிலாளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 17 ஆயிரத்து 908ஆக இருந்தது. புதியதாக 14.19 லட்சம் பதிவான பயனாளிகளுக்கு, 608.47 கோடி செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியம், 16 நல வாரியங்களில் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியம் தவிர, பிற வாரியங்களில் மேற்படி நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தேவையான நிதியை வழங்கிவருகிறது.
பத்து வருடங்களில் இந்நலத்திட்டங்களைச் செயல்படுத்த 725 கோடியே ஐந்து லட்சத்து 34 ஆயிரத்து 753 ரூபாய் தமிழ்நாடு அரசு மானியமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தொழிலாளர் ஆணையர் இரா. நந்தகோபால், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்க உறுப்பினர்கள், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வீட்டு வசதி வாரியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் - துணை முதலமைச்சர் ஆலோசனை!