சென்னை: ஆவடி மாநகர காவல் சரகத்தின் கீழ் 25 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்தக் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் இருந்து முழு விவரத்தை கேட்டறிந்து புகார் பெற ஏதுவாக காவல் நிலைய நுழைவுவாயிலில் வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
T-6 ஆவடி காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு அறையை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று (ஏப்ரல் 2) திறந்து வைத்து, அங்கு வந்திருந்த பொதுமக்களின் புகாரை கேட்டறிந்தார்.
பொதுமக்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவலர்களை அறிவுறுத்தினார். அதேபோல் ஆயுதப் படையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக 'CL APP' என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி காவலர்கள் விண்ணப்பம் செய்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 15 நாள்களில் 30 பேர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்தநிகழ்வில் ஆவடி மாநகர கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரி, ஆவடி காவல் துணை ஆணையர் மகேஷ், ஆவடி சரக உதவி ஆணையர் சத்தியமூர்த்தி , வெங்கடேசன் மற்றும் ஆய்வாளர்கள் கோபிநாத் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: போதைப்பொருளுக்கு எதிராக அனிமேஷன் மூலம் காவல் துறை விழிப்புணர்வு