சென்னை: இந்தாண்டு தொடக்கத்திலிருந்தே மக்கள் இ-பைக்குகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். இதற்கு உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையும் ஓர் முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல், வீட்டிலேயே சார்ஜ் செய்துகொள்ளலாம். காற்று மாசு ஏற்படாது.
மத்திய அரசு பல்வேறு மானியங்களை வழங்குகிறது. இப்படி பல நன்மைகள் உள்ளன. ஆனால் கூடவே பல திடுக்கிடும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சில மாதங்களாக இ-பைக்குகள் தீ பிடித்து எரியும் சம்பவம் அதிகரித்துவருகிறது.
திடீரென வெடிக்கும் இ-பைக்குகள்: வேலூர் மாவட்டத்தில் இ-பைக் வெடித்து தந்தை, மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் இ-பைக் உரிமையாளர் மட்டுமல்லாமல் மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை மாதவரத்தில் கல்லூரி மாணவர் இ-பைக்கை ஓட்டி வந்தபோதே, இஞ்சினில் திடீரென புகை வந்து தீப்பிடித்துள்ளது. நல்வாய்ப்பாக ஓட்டிவந்தவர் வாகனத்தை நிறுத்தி தூரம் சென்றுவிட்டார். இதேபோல திருவள்ளூரில் விவசாயி ஒருவரின் இ-பைக் தீப்பிடித்தது.
காரணம் என்ன: இ-பைக்குகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளில் உள்ள எலக்ட்ரோலைட் திரவம் எரியக்கூடிய தன்மை கொண்டவை. இதனால் வாகனங்கள் அதிக தூரம் ஓட்டப்பட்டலோ, அதிக நேரம் சார்ஜ் செய்யப்பட்டாலோ பேட்டரிகள் வெப்பமடைந்து எரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிக வெப்பம், வோல்டேஜ் பைக்குகளை வெடிக்க கூட தூண்டலாம். அதாவது வீட்டிலுள்ள மின்னணு சாதனங்களில் ஏற்படும் ஷார்ட் சர்க்யூட் போலவே இதிலும் ஏற்படும்.
பராமரிக்கும் முறை: இதுகுறித்து ஆம்பியர் இ-பைக்கின் சேவை மைய பொறியாளர் கணேசன் கூறுகையில், "பேட்டரி வாகனங்களை வாங்கும் முன்பு தயாரிப்பு நிறுவனம் வழங்கும் வாடிக்கையாளர் கையேட்டை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
வாகனம் வாங்கிய பிறகு தரமான மற்றும் பைக் நிறுவனம் வழங்கக்கூடிய சார்ஜ் வயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இ-பைக்குகளை தண்ணீர் மூலம் சுத்தம் செய்யும் போது பேட்டரிகளை கழட்டி வைத்துவிட வேண்டும்.
அதிக நேரம் சார்ஜ் செய்வதை தவிர்த்துவிட்டு, முழுமையாக சார்ஜ் ஆன உடனேயே வயரை அகற்ற வேண்டும். தற்போதுள்ள சூழலில் பேட்டரி மேலாண்மை அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது பேட்டரியில் இருந்து வரும் வோல்டேஜ் அதிகமாக வந்தாலோ, முழுமையாக சார்ஜ் ஏறிவிட்டாலோ வோல்டேஜ் நின்றுவிடும். இ-பைக்குகளில் சிறிய மாற்றம் தென்பட்டாலோ நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஒருமுறை சார்ஜ் செய்தால், அந்த சார்ஜின் அளவை முழுமையாக பயன்படுத்திய பிறகே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். அடிக்கடி சார்ஜ் செய்யக்கூடாது. சூரிய ஒளி அதிகமாக படும் இடத்தில் இ-பைக்குகளை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அதிக வெப்பத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள்களை இ-பைக்குகளில் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். தினமும் வாகனத்தை எடுக்கும் போது பேட்டரியில் ஏதாவது மாற்றம் அல்லது கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும்" என்றார்.
வானிலைக்கு இ-பைக்குகள் வடிவமைக்கப்படவில்லை: இதுதொடர்பாக ஏதர் பவர் (Ather power)-ன் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தருண் மேத்தா வெளிட்டுள்ள அறிக்கையில், "எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகள் இந்திய வானிலைக்காக வடிவமைக்கப்படவில்லை. அதற்கான மாற்றம் விரைவில் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறுகையில், “இ-வாகனங்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வருவதற்கு அரசு ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. இ-பைக் விபத்துகள் குறித்தும், காரணங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் பல வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வர உள்ளது. இ-பைக்குகள் தயாரிப்பு நிறுவங்களும் பல நெறிமுறைகளை வழங்கி உள்ளன. இருந்தாலும் இ-பைக்குகளின் பேட்டரிகளை பக்குவமாக கையாளுவது நல்லது” என தெரிவித்திரந்தார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பற்றி எரிந்த தீ; தீக்கிரையான பஜாஜ் ஷோரூம்.. ரூ.1 கோடி பொருள்கள் நாசம்!