சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து சுமார் 1.50 மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினர். சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஒன்றின் தேர்வு மையத்தில் மாணவி ஒருவரை உள்ளாடையை அகற்ற சொன்னதாக சமூக வலைத்தளங்கள் மூலமாக புகைப்படத்துடன் சர்ச்சை கிளம்பியது.
இது தொடர்பாக பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய மயிலாப்பூர் காவல் மாவட்ட நுண்ணறிவு பிரிவு மற்றும் உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளான மாணவி என கூறப்படும் மாணவி நேற்று உடல் நலக்குறைவுடன் தேர்வு எழுத வந்துள்ளார். தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது இரண்டு, மூன்று முறை அவருக்கு வாந்தி வந்துள்ளது. இதனால் மிகவும் சோர்வுடன் தேர்வை எழுதி முடித்துவிட்டு தனது சகோதரருக்காக பள்ளி வளாகத்திலேயே அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற நாளிதழ் பெண் செய்தியாளர் ஒருவர் ஏன் சோர்வாக அமர்ந்திருக்கிறீர்கள் என மாணவியிடம் கேட்டுள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் மேலும் உள்ளாடை அணியாமல் தேர்வு எழுத வந்ததால் இதுபோன்று அமர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட பெண் செய்தியாளரின் பதிவில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து சமூக வலைதளங்களில் வேகமாக சிலர் பரப்பி உள்ளனர்.
தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் உள்ளாடை அகற்ற சொன்னதாக பரவி வரும் தகவல் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்த பொழுது, அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது. குறிப்பாக உள்ளாடையை அகற்ற சொன்னதாக எழுந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் உடல்நிலை சரியில்லாத மாணவி விவரங்களை போலீசார் சேகரிக்கவில்லை எனவும் மாணவி தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்தவித புகாரும் காவல்துறைக்கு வரவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி உடல்நிலை சரியில்லாமல் தேர்வு எழுத வந்ததால் இரண்டு, மூன்று முறை வாந்தி எடுத்ததுடன் அவரை ஆற்றுப்படுத்தி பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள், தேர்வு கண்காணிப்பாளர் முன்னிலையில் அவரை ஆசுவாசப்படுத்தி தேர்வு எழுத வைத்துள்ளனர்.
ஒரு சில மாணவிகள் இதேபோன்று உள்ளாடை அணியாமல் வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதற்கான காரணம் நீட் நுழைவுத் தேர்வின் பொழுது மெட்டல் டிடெக்டர் உதவியுடன் மாணவ மாணவிகள் சோதனை இடப்படுவார்கள், அவ்வாறு மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யும் பொழுது உள்ளாடையில் உள்ள கொக்கி மூலம் சத்தம் எழ வாய்ப்பு இருப்பதால் மாணவிகளுக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்படும் என்ற காரணத்திற்காக இதுபோன்று சிலர் உள்ளாடை அணியாமலும் தேர்வு எழுத வருவதாக கூறப்படுகிறது.
நீட் நுழைவுத் தேர்விற்கு செல்லும் மாணவ மாணவிகளிடம் சோதனை என்கிற பேரில் கடும் கெடுபிடி காட்டப்படுவதால் இது போன்ற எதிர்பாராத சம்பவங்களும் மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து அசவுகரியங்களும் ஏற்பட்டு வருவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.