அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்கக் கூட்டமைப்பின் முப்பெரும் விழா சென்னை தியாகராய நகரில் இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், சங்க நிர்வாகிகள் ரியல் எஸ்டேட் துறை, பத்திர பதிவுத்துறை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றில் உள்ள பிரச்னைகள் குறித்து அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள்.
தொழில்துறையை மேம்படுத்துவதற்காகவே முதலமைச்சர் வெளிநாடு சென்றார். அதுபோல், ரியல் எஸ்டேட் தொழில் நல்ல வகையில் இருந்தால் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்த்தும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பிரச்னைகளை ஆராய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது' என்று கூறினார்.
மேலும், தமிழ்நாடு உள்ளாட்சித்துறை சிறப்பாக செயலாற்றியதற்கான விருதைப் பெற நாளை டெல்லி செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.