சென்னை: சென்னை தியாகராய நகரில் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசினார். அப்போது அவர், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகார் அளித்தார்.
அதனை அடுத்து ஆர்.பி.வி.எஸ்.மணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாலையில் மணியன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து செப்டம்பர் 27ஆம் தேதி வரை ஆர்.பி.வி.எஸ்.மணியனை நீதிமன்ற காவலில் அடைக்க, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்.பி.வி.ஸ்.மணியனின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், நீதிபதி எஸ்.அல்லி முன்பு அவர் மீண்டும் ஆஜர்படுத்தபட்டார். அப்போது, இதுபோன்ற கருத்துகளை இனிவரும் காலங்களில் தெரிவிக்க மாட்டேன் என நீதிபதியிடம் ஆர்.பி.வி.எஸ்.மணியன் மன்னிப்பு கோரினார்.
மேலும், தன்னுடைய வயது மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு தனக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதுதொடர்பாக தனியாக மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அல்லி, அக்டோபர் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் புகார்!