முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றின் நிலை குறித்தும், அதை மூன்றாம் நிலைக்குச் செல்ல விடாமல் தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேரிடர் மேலாண்மை துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், "தமிழ்நாட்டில் இதுவரை 4,612 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 571 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்குத் தேவையான முகக்கவசங்கள், வெண்டிலேட்டர் கையிருப்பில் உள்ளன. அதிவிரைவாக கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய வசதியாக, ரேபிட் டெஸ்ட் (RAPID Test) கருவிகள் கொள்முதல் செய்வதற்கு, இன்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கருவிகள் வரும் 10 ஆம் தேதி முதல் பயன்படுத்தப்படும். இதைப் பயன்படுத்தி 20 நிமிடங்களில் கரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உள்ளதா, இல்லையா என்பதை எளிதில் கண்டறிய முடியும்.
மொத்தம் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள், வெளிநாடு சென்றுத் திரும்பியவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சைப் பெற்று கொள்ள வேண்டும்.
வெளி மாநிலங்களில் இருக்கும் தமிழ் மக்களைப் பாதுகாக்க, 12 தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு மீறியவர்களிடம் இருந்து காவல்துறையினரால், 25,14,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மக்களின் நலனுக்காகத் தான் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களை துன்புறுத்துவதற்காகப் பிறப்பிக்கப்படவில்லை. பொது மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க முடியும். காவல் துறையினர் கஷ்டங்களைப் பொது மக்கள் உணர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் புலிக்கு கரோனா தொற்று!