சென்னை: தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''2023 – 2024ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகியப் படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை 40ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம்.
இதில் 7.5 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3ஆயிரத்து 42 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவிற்கு 98 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் மற்றும் 7.5 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் இன்று (ஜூலை 16) வெளியிடப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 6ஆயிரத்து 326 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 1768 BDS இடங்களும் உள்ளன. 7.5 விழுக்காட்டிற்கான ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லுரிகளில் 473 MBBS இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 133 இடங்களும் உள்ளன. இதில், கடந்தாண்டைவிட நடப்பாண்டில் 606 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியும், 21 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் 13 என 71 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 71 மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான 11ஆயிரத்து 475 இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கான இடங்கள் 2ஆயிரத்து 150 உள்ளன.
வரும் ஜூலை 20ஆம் தேதி அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங் தொடங்கினால், தமிழ்நாட்டில் ஜூலை 25ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்கும், இதுவரை மத்திய அரசின் சார்பில் மருத்துவ கலந்தாய்விற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கவில்லை. இணையதளத்தில் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை மாறுதலுக்கு உட்பட்டவையாக இருப்பதால் தேதியை உறுதியிட்டு சொல்ல முடியவில்லை. டேராடூனில் நடைபெற்ற சுகாதாரத்துறை அமைச்சர்களுடனான கூட்டத்தில், இரண்டு நாட்கள் நடைபெற்ற பல்வேறு தலைப்புகளில் கூட்டம் நடைபெற்றது.
அப்போதும் மருத்துவப்படிப்பில் மாணவர்களை அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறும் போது, மாநில இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தினால் பாதிக்கப்படும் என்பதை எடுத்துக் கூறினோம். எனவே அவர்களும் அது குறித்து ஆலோசித்து கூறுவதாக தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு உட்பட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெறும். பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும். மருத்துவம் சார்ந்த படிப்புகளில் தற்பொழுது கலந்தாய்வில் இல்லாமல் உள்ள பிறப் பாடங்களை ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்விற்கு அடுத்தாண்டில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அரசாணை வெளியிட வேண்டி உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெருசலேம் புனித யாத்திரைக்கு கூடுதலானோர் பயணிக்க முதல்வர் நடவடிக்கை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்