சென்னை: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் ஈகைத் திருநாள் விழா நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 22) தமிழ்நாட்டில் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் ரம்ஜான் தொழுகையில் கலந்துகொண்டுவிட்டு, பண்டிகையை சிறப்பாக கொண்டாடத் தயாராகியுள்ளனர்.
சென்னையில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏற்கனவே ரயில்,பேருந்து போன்றவைகளில் முன்பதிவு செய்துள்ளனர். அவ்வாறு செய்யாதவர்கள் கடைசி நேரத்தில் விமானங்கள் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்குப் படையெடுக்கின்றனர்.
இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விமானங்களிலும் திருச்சி, கோவை விமானங்களிலும் பயணக்கட்டணங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. அதைப்போல் டெல்லி, கொல்கத்தா போன்ற வடமாநிலங்களுக்குச் செல்லும் விமானங்களிலும் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
சொந்த ஊர்களில் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் கட்டண உயர்வை ஒரு பொருட்டாக நினைக்காமல் எவ்வளவு பணம் கொடுத்தாவது டிக்கெட் வாங்கி விட வேண்டும் என்று பயணிகள் அதிக கட்டணங்கள் கொடுத்து விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்களில் வழக்கமான கட்டணம் ரூ. 3,675. ஆனால், இன்று ரூ. 11,000 -14,000 வரை டிக்கெட் கட்டணம் உள்ளது.
அதைப்போல் சென்னை - மதுரை வழக்கமான விமான கட்டணம் ரூ. 3,419. ஆனால், இன்றைய தினம் ரூ. 10,000-13,000 வரை டிக்கெட் கட்டணம் உள்ளது.
சென்னை - திருச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ. 2,769. ஆனால், இன்று ரூ. 9,000- 13,000 வரை கட்டணம் உள்ளது.
சென்னை - கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,313. ஆனால், இன்று ரூ. 5,500-11,000 வரை கட்டணம் உள்ளது.
அதைப்போல் சென்னை - டெல்லி இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,973. ஆனால், இன்று ரூ.8500 -10,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதைப்போல் சென்னை - கொல்கத்தா இடையே வழக்கமான கட்டணம் ரூ. 5,309.ஆனால், இன்று ரூ.9,000-15,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதைப்போல், விமான கட்டணம் பெருமளவு அதிகரித்தபோதிலும் விமானங்களில் இருக்கைகள் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே, பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒரே ஒரு அமமுக சேர்மனை தட்டிக் தூக்கிய ஈபிஎஸ்.. டிடிவி தினகரன் அப்செட்!