முரசொலி நாளிதழின் அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அந்த இடம் தமக்கு சொந்தமானது என்று ட்விட்டரில் ஆவணங்களை வெளியிட்டு, அரசியலிலிருந்து விலகத் தயாரா என்று ராமதாஸுக்கு சவால்விடுத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பான விசாரணை தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் முன் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு பதிவில், “முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறதாமே... அப்படியானால், அந்தப் பட்டா வெளியிட்டது, அரசியலிலிருந்து விலகத் தயாரா? என்று சவால்விட்டதெல்லாம் வழக்கம்போல் வெற்றுச் சவடால் தானா?
அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசிவிட்டு, இப்போது நாங்களே வாடகைக்குதான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?
முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப்பத்திரத்தைத்தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால்விட்டவர் அரசியலிலிருந்து விலகுவாரா?
அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டடத்திலிருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே நிறுவனம்... நம்ம முரசொலி நிறுவனம்தான். வெறும் கையால் முழம்போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முரசொலி விவகாரம்: வாய்தா வாங்கிய பாஜக பிரமுகர்; விளாசித் தள்ளிய ஆர்.எஸ்.பாரதி!