சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். இதையடுத்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
”தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்ட ராமமூர்த்தி அக்கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் உழைத்தார்.
1990-களின் பிற்பகுதியில், காங்கிரசிலிருந்து மூப்பனார் பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியதால், காங்கிரஸ் வலுவிழந்து இருந்த நிலையில் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடத்தினார். காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். தாம் வகித்த பதவிகள் அனைத்துக்கும் நேர்மையாக இருந்து சிறப்பு சேர்த்தவர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தால் கட்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனும் தொடர்பு வைத்திருந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை பாராட்டியவர். தனிப்பட்ட முறையில் என் மீது அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர். திண்டிவனம் வரும் போதெல்லாம் என்னை சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அவர் மீது எனக்கும் அன்பும், மரியாதையும் உண்டு.
திண்டிவனம் இராமமூர்த்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.
அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
”தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். தேசிய சிந்தனையோடு பல்லாண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தமான அவரது மறைவால் வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்”
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி
”பெருந்தலைவர் காமராஜர் தலைமையை ஏற்று மாநில செயலாளர், பொதுச்செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர், சட்டப்பேரவை மேலவை எதிர்க்கட்சி தலைவர், மாநிலங்களவை நியமன உறுப்பினர் பொறுப்புகளை வகித்து கட்சிக்காக அரும்பாடுபட்ட திண்டிவனம் ராமமூர்த்தி காலமான செய்தி கேட்டு வருத்தமும், துயரமும் அடைந்தேன்.
சட்டமன்ற உறுப்பினராக, மேலவை உறுப்பினராக இருந்தபோது ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர். பின்தங்கிய சமுதாய மக்களின் நலன்களை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டவர்.
திண்டிவனம் கே.ராமமூர்த்தி அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்”
இதையும் படிங்க: திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்