இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தினமும் ஒன்றரை கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. உள்ளூர் தேவைகளுக்கு போக ஆவின் நிறுவனம் மூலம் தினமும் சராசரியாக 30 லட்சம் லிட்டரும், தனியார் நிறுவனங்கள் மூலம் ஒரு கோடி லிட்டரும் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனத்தின் மூலம் ஒரு லிட்டர் எருமைப்பால் 41 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பசும்பால் 32 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. பாலின் அடர்த்திக்கு ஏற்றவாறு கொள்முதல் விலை சற்று மாறுபடும்.
தனியார் நிறுவனங்கள் பாலின் அடர்த்திக்கு ஏற்ப லிட்டருக்கு ரூ.28 முதல் ரூ.36 வரை கொள்முதல் விலையாக வழங்கிவந்தன. ஆனால், கரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட மந்த நிலையை காரணம் காட்டி, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.11 வரை தனியார் நிறுவனங்கள் குறைத்து விட்டன. இப்போது தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.18 முதல் ரூ.25 வரை மட்டுமே விலையாகத் தருகின்றன.
கால்நடைகளுக்கான தீவனம் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் அண்மைக்காலங்களில் கடுமையாக உயர்ந்து விட்டன. அதனால், ஒரு லிட்டர் பாலுக்கான உற்பத்திச் செலவு ரூ.25க்கும் அதிகமாகி விட்ட நிலையில், ஒரு லிட்டர் பாலை ரூ.18 என்ற அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்வதை பால் உற்பத்தியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதனால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில், குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள், பாலை தனியார் நிறுவனங்களுக்கு வழங்காமல் தரையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை போராட்டமாக பார்க்காமல், அவர்களின் விரக்தியை வெளிப்படுத்தும் செயலாக தமிழ்நாடு அரசு பார்க்க வேண்டும்.
இந்த அநீதியை தடுத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயம் வழங்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும். ஆவின் நிறுவனம் எந்த விலைக்கு பாலை கொள்முதல் செய்கிறதோ, அதே விலைக்கு தனியார் நிறுவனங்களும் பால் கொள்முதல் செய்வதையும், அதன் மூலம் பால் உற்பத்தியாளர்களின் அனைத்து குறைகளும் தீர்க்கப்படுவதையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
அதேசமயம் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளை கண்காணிக்கவும், ஒழுங்குப்படுத்தவும் பால் கொள்முதல் மற்றும் விற்பனை ஒழுங்கு முறை ஆணையத்தை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.