மகாபாரத இதிகாசக் கதையில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார்.
இதனால் திரௌபதியை தன் தங்கையாக ஏற்றுக்கொண்ட கிருஷ்ணர் அவளுக்கு வரும் எல்லா துன்பங்களையும் தடுத்து நிறுத்துவார்.
இந்நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாக பின்னாளில் ஆவணி மாதம் பௌர்ணமி நாளன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இதில் பெண்கள் சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.
இதன் மூலம் அந்த ஆண் இந்தப் பெண்ணை பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமின்றி அந்த ஆண் பரிசும் வழங்க வேண்டும். ரக்ஷாபந்தன் அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகையென்றாலும், தற்போது சாதி, மத பேதமின்றி சமூதாய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
இந்தப் பண்டிகை பொதுவாக வட இந்தியாவில்தான் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் தற்போது தென்னிந்தியாவிலும் கொண்டாடப்பட்டுவருகிறது.
அப்படி சென்னையின் மினி வட இந்தியா என்று சொல்லப்படும் சௌகார்பேட்டையிலும் ஹோலி, ரக்ஷாபந்தன் கொண்டாடப்படும். இதனால் ரக்ஷாபந்தன் வருவதற்கு ஒருவாரம் முன்பே சௌகார்பேட்டை கலைக்கட்ட ஆரம்பித்துவிடும்.
ஆனால் தற்போது கரோனா வைரஸ் பரவல் காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளதால் ராக்கி விற்பனை கலையிழந்து காணப்படுவதாக கூறுகின்றனர் விற்பனையாளர்கள்.
இது குறித்து பேசிய சௌகார்பேட்டை ராக்கி மொத்த வியாபாரி தஷ்ரத், “கரோனாவால் மக்கள் கூட்டம் பெரிதும் குறைந்துள்ளது. மேலும் விற்பனை கடந்த வருடங்களை ஒப்பிடும் போது இந்த வருடம் வெறும் 20 விழுக்காடு வரை தான் உள்ளது. இப்படி நின்று உங்களிடம் என்னால் பேச முடியாத அளவு கூட்டம் இருக்கும். பொதுமக்கள் அச்சம், கடைகள் திறக்கும் நேரம் குறைவு போன்றவை பெரிதும் பாதித்துள்ளது. மேலும், ராக்கிகள் நாங்கள் ராஜ்கோட்டில் இருந்து வாங்குகிறோம். இதில் சில பொருள்கள் சீனாவிலிருந்து வாங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
ஊரடங்கால் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியாததால், வியாபாரம் கடுமையாக பாதித்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றார் மற்றொரு வியாபாரியான விகாஸ். அதுமட்டுமின்றி, ரயில், பேருந்து போன்ற வசதிகள் இல்லாததால் வெளி மாவட்ட, மாநில வாடிக்கையாளர்கள் வருவது இல்லை. இந்த வருடம் முற்றிலும் மக்கள் கூட்டம் இல்லை எனக் கவலை தெரிவிக்கிறார் விகாஸ்.
பலரின் பாசங்களை வெளிப்படுத்த கலையாக வடிவமைக்கப்பட்ட ராக்கிகள் விற்பனையில்லாததால், இதனை நம்பி வாழ்க்கை நடத்தும் விற்பனையாளர்களின் வாழ்க்கை களையிழந்துள்ளது.
அதுமட்டுமின்றி சீன பொருள் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், வாடிக்கையாளரின் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ராக்கிகள் கொடுக்க முடியவில்லை என்றாலும், ராக்கி உற்பத்தி நம் உள்நாட்டிலேயே செய்யப்படுவதால், ராக்கி பண்டிகையை தன்னிறைவு அடைய அடியெடுத்து வைக்கும் இந்தியாவை நினைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.
இதையும் படிங்க....பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை அதிமுக அரசும், பாஜகவும் காப்பது ஏன்? இந்திய மாதர் சங்கம் அறிக்கை!