சென்னை மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிப்பு மே 24 ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 31 ஆம் தேதியும், அதற்கு மறுநாள் (ஜூன் 1) பரிசீலனை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஜூன் 3 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.
ஜூன் 21 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை ஓய்வுபெறும் உறுப்பினர்களின் இடங்களை நிரப்ப, மாநிலங்களவைக்கு இரு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கூறியது. 15 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களின் பதவிக்காலம் அவர்கள் ஓய்வு பெறும் தேதிகளில் முடிவடைகிறது எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய உறுப்பினர்கள்: இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 29 ஆம் தேதி காலியாகும் 6 மாநிலங்களவைத் தொகுதிகளில் தற்போது திமுக சார்பாக டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோர் அதிமுக உறுப்பினர்களாகவும் ராஜ்யசபாவில் அங்கம் வகிக்கின்றனர்.
இதில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களில் நான்கு பேர் திமுக சார்பாகவும், 2 பேர் அதிமுக சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போதைய ஆளும் கட்சியான திமுகவைப் பொறுத்தவரை தங்க தமிழ்ச்செல்வன் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவின் திட்டம்: அதிமுகவில் இருந்து அமமுகவிற்கு மாறி திமுவுக்கு வந்த தங்க தமிழ்செல்வன் தேனி மாவட்டத்தில் தனக்கு இருந்த செல்வாக்கை கடந்த தேர்தல்களில் கடுமையாக சரித்துள்ளார். குறிப்பாக 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு போட்டியாக போடிநாயக்கனூர் தொகுதியில் களமிறக்கப்பட்டு கடும் போட்டிக்கு மத்தியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக உள்ள ஏ.கே.எஸ்.விஜயனும் மாநிலங்களவை சீட் பந்தயத்தில் முன்னணியில் இருக்கிறார். இவர் தி.மு.க சார்பாக கடந்த 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை வென்று மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். மேலும் பதவி காலியாகும் எம்.பிக்களான ஆர்.எஸ்.பாரதியும், டி.கே.எஸ்.இளங்கோவனும் முயற்சித்து வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் கடும் போட்டி: அடுத்ததாக அதிமுகவிற்கு கிடைக்க கூடிய 2 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு 400 க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ் மகன் உசேனுக்கு அவைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரும் தனக்கு மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கோகுல இந்திரா, பொன்னையன், உள்ளிட்ட பலரும் தங்களுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்க வேண்டும் என போட்டி போட்டுக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி திமுக, அதிமுக என இரு தரப்பினர் இடையே மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருவதால் அரசியல் வட்டாரத்தை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஜூன் 10 மாநிலங்களவை தேர்தல்.. தமிழ்நாட்டில் அதிருஷ்டம் யாருக்கு? ப.சிதம்பரம் மீண்டு(ம்) வருவாரா?