ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடக்கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரணை செய்த ஜெயின் கமிஷனால் அமைக்கப்பட்ட பல்நோக்கு குழு விசாரணையின் இறுதிமுடிவுக்காக காத்திருப்பதாக, தமிழ்நாடு அரசிற்கு ஆளுநர் பதில் அளித்துள்ளார் என்றும், இதுதான் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்படும் காலதாமதத்திற்கான காரணம் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "கரோனா போன்ற பாதிப்புகள் உள்ள இதுபோன்ற சூழலில் கூட பரோல் மனு மீது தகுந்த உத்தரவை பிறப்பிக்காத சிறை அலுவலர்களுக்கு ஏன் ஒருலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கக்கூடாது? கைதிகளுக்கு பரோல் அளிப்பதும், நிராகரிப்பதும் சிறைத்துறையின் உரிமைதான், அதன்மீது உரிய முடிவை அறிவிக்க வேண்டும். கடந்த மார்ச் மாதம் பரோல் மனு அளித்து, ஏப்ரல் மாதம் நினைவூட்டல் அளிக்கப்பட்டும், ஏன்? ஜூலை வரை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு உரிய முறையில் செயல்படாததால்தான், நீதிமன்றத்தின் வழக்கு சுமை அதிகரித்து வருகிறது.
பேரறிவாளன் வழக்கு மற்ற வழக்குகளை போன்ற சாதாரண வழக்கு அல்ல. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் இதேபோன்று நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. அரசு, சிறைத்துறை உரிய நேரத்தில் கடமையாற்றினால் அவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை. அலுவலர்கள் கும்பகர்ணன் மாதிரி தூங்கி கொண்டிருக்கிறீர்களா? ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் உள்ளனர். தற்போது, பரோல் வழக்கில் வழக்கறிஞருக்கு வேறு கூடுதலாக செலவு செய்ய வேண்டுமா? அவர்களின் வழக்குக்கான செலவை அரசுக்கு அபராதமாக விதித்து வசூலிக்க உத்தரவிடப்படும்" என காட்டமாகத் தெரிவித்தனர்.
அப்போது, பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்குவது குறித்து பதிலளிக்க அவகாசம் வழங்கவேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: முப்பது ஆண்டுகள் சிறைவாசம் என்பது மனித உரிமை மீறல் - உதயநிதி ஸ்டாலின்