சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு இறுதி மரியாதை செலுத்த தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் ரஜினிகாந்த் இன்று (டிச.29) சென்னை வர உள்ளார். இந்நிலையில் அவர், 'அசாத்தியமான மன உறுதி உள்ளவர், விஜயகாந்த் எனவும், ஆரோக்கியமாக இருந்தால் விஜயகாந்த் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் எனவும், உடல்நிலை தேறிவிடுவார் என மிகவும் எதிர்பார்த்தேன்' எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளரிடம் அளித்த பேட்டியில், 'அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் மறைந்தது மிகப் பெரிய துரதிஷ்டம். விஜயகாந்த் மன உறுதி உள்ள மனிதர் எப்படியும் அவர் உடல்நிலை தேறிவிடும் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால், தேமுதிக பொதுக்குழுவில் அவரைப் பார்க்கும் போது எனக்கு உறுதி கொஞ்சம் குறைந்து விட்டது. விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்று உருக்கத்துடன் பேசியுள்ளார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று (டிச.28) உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி தமிழ்நாடெங்கும் உள்ள திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
முன்னதாக, மருத்துவமனையில் இருந்து தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். மேலும், அப்போது கண்ணீர் விட்டு கதறி அழுத பிரேமலதா விஜயகாந்தையும் மற்றும் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நடிகர் சிவக்குமார், கமல்ஹாசன், டி.ராஜேந்தர், சரத்குமார், திரைப்பட பாடலாசிரியர் அருண்பாரதி, இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து என திரைப் பிரபலங்கள் பலரும் வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, தமிழ்நாடெங்கும் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் சென்னை தீவுத்திடலில் இன்று காலை சுமார் 6:00 மணியளவில் ரசிகர்கள், தொண்டர்கள் புடைசூழ பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது. இதற்காக சென்னை மாநகர காவல்துறை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 3000 போலீசார் சென்னை தீவுத்திடல் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்... அஞ்சலி செலுத்த கண்ணீருடன் குவியும் பொதுமக்கள்..!