சென்னை: ஜார்ஜ் டவுன் மின்ட் சாலையில் சீத்தல் எண்டர்பிரைஸ் என்ற பெயரில் பாத்திரங்கள் மொத்த விற்பனை செய்யும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நான்கு மாடிகள் கொண்ட இக்கட்டிடத்தில் முதல் இரண்டு தளங்களில் விற்பனை கூடமும், 4வது தளத்தில் பொருள் சேமித்து வைக்கும் குடோன் அமைந்துள்ளது. மேலும் இக்கடையில் பொருட்களை எடுத்து செல்ல லிப்ட்டை (திறந்த வெளி) பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பாத்திரக்கடையில் கடந்த சில மாதங்களாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கீமாராம்(24) என்ற வாலிபர் வேலை பார்த்து வந்தார். செவ்வாய்கிழமை மாலை ஊழியர் கீமாராம் தரைத் தளத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு லிப்ட்டில் நான்காவது மாடிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரண்டாவது தளத்தில் லிப்ட் செல்லும் போது கீமாராம் கீழே எட்டிப்பார்த்தபோது, எதிர்பாராத விதமாக அவரது தலை லிப்ட்டின் பாக்கவாட்டு சுவரில் சிக்கி கொண்டது. மேலும் நான்காவது மாடி வரை பக்கவாட்டு சுவரில் தலை தேய்த்தவாறு இழுத்து செல்லப்பட்டதால் கீமாராம் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இதனைத் பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனே ஏழு கிணறு போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். எஸ்பிளனேடு பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிங் இயந்திரத்தால் லிப்ட் கம்பிகளை வெட்டி எடுத்து பின்னர் கீமாராம் உடலை மீட்டனர்.
இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர், மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.