சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மாநில மருத்துவக் கல்வி இயக்க தேர்வுக் குழு சார்பில் இங்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும், அதன் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வசம் இருந்தது.
இந்நிலையில், இதனை முழுவதும் அரசே ஏற்று கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என்று சட்டப்பேரவையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அதனடிப்படையில், இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், "மக்கள் நல்வாழ்வுத் துறையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படும். அந்தக் குழுவினர், அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படுத்துவதற்கான திட்டங்களை மேற்கொள்வார்கள். அதன் பின்னர் மாணவர்களுக்கான கட்டணம் உள்ளிட்டவை நிர்ணயம் செய்யப்படும்" என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, "ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. கடந்த 2013ஆம் ஆண்டே தமிழக அரசு சட்டம் இயற்றி, அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு உடைமையாக்கியது.
இருப்பினும், அப்பல்கலைக் கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியையும், பல் மருத்துவக் கல்லூரியையும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக் கழகத்தின் கீழும், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டுவரவில்லை. இதனால் குழப்பங்கள் நிலவின. அக்கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
இது வெறும் அறிவிப்பாக நின்று விடக் கூடாது. உடனடியாக முழுமையான செயல்பாட்டிற்கு வர வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை முழுமையாக, உடனடியாக திருப்பி வழங்க வேண்டும்" என்றார்.