சென்னை: நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
அதேபோல் தாம்பரம், பல்லாவரம், சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் கன மழையின் காரணமாக மழை நீர் தேங்கி நின்றது.
வாகன ஓட்டிகள் மழை நீரில் வாகனத்தை இயக்கி வந்த நிலையில், ஒரு சிலரது வாகனங்கள் மழை நீரில் சிக்கியது. பின்னர் வாகன ஓட்டிகள் மழை நீரின் தேக்கத்தால் திரும்பச் சென்றனர். இதனால் மேற்கு தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து கிழக்கு தாம்பரம் செல்ல 2 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல் கன மழையின் காரணமாக எம்.இ.எஸ்.சாலையில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்களைத் தள்ளிச் செல்லும் நிலை ஏற்பட்டது. அதேபோல் தாம்பரத்தின் முக்கிய பகுதியாக காணப்படும் சண்முக சாலை மார்க்கெட் பகுதியில் அனைத்துக் கடைகளிலும் மழை நீர் புகுந்தது
இதனால் வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், நேற்று நள்ளிரவில் பெய்த கனமழையின்போது தாம்பரம் மேயர் வசந்தகுமாரி நேரில் சென்று மழை தேங்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக மழை நீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை முதல் தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீர் தேங்கிய இடங்களில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இதற்கு நிரந்தர தீர்வைக் காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக கிரிக்கெட் சங்க நிர்வாகியிடம் வாக்குவாதம்! புதுக்கோட்டை கிரிக்கெட் சங்கத்தினர் திடீர் முற்றுகை! என்ன காரணம்?