சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி நீர் தேக்கம் உள்ளது. கனமழை பெய்துவருதால் மொத்த உயரமான 35 அடியில் 29.9 அடியை பூண்டி ஏரி எட்டியுள்ளது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி அக்டோபர் 25ஆம் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதையடுத்து பூண்டியிலிருந்து, புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்துவருவதால் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 29.70 அடியாக பதிவாகியது.
மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு வாரத்தில் பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டிவிடும். இதனால், பூண்டி நீர்த்தேக்கத்தின் நீரை செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு சென்று நிரப்பும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.
பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 400கனஅடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 300கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
வறண்டு கிடந்த செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னதாக வெறும் 44மி.கனஅடி தண்ணீர் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 2.80 அடி உயரத்தை செம்பரம்பாக்கம் ஏரி எட்டியுள்ளது. இங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டிற்கு வினாடிக்கு மூன்று கனஅடி தண்ணீர் குடிநீருக்காக அனுப்பப்படுகிறது.
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளையும் சேர்த்து 2789 மி.கனஅடி (2.7 டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் 1.7 டிஎம்சி நீர் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து குடிநீர் வாரிய அலுவலர்கள் கூறுகையில், ‘‘சென்னையில் உள்ள மக்களுக்கு அக்டோபர் 20ஆம் தேதி வரை தினமும் 53 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கிருஷ்ணா நீர்வரத்து, வடகிழக்குப் பருவமழை காரணமாக அக்டோபர் 21ஆம் தேதி முதல் குடிநீர் வினியோகம் 65 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களில் பெய்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் மொத்தம் 1.5 டிஎம்சி-க்கு மேல் நீர் அதிகரித்துள்ளது. ஏரிகளில் தற்போது உள்ள 2.7டிஎம்சி. தண்ணீர் மூலம் சென்னை மக்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான குடிநீரை தங்கு தடையின்றி வழங்க முடியும்’’ என்றனர்.
இதையும் படிங்க: கனமழையால் மலைக் காய்கறிகள் அழுகும் அபாயம்!