சென்னை: ஓடும் ரயிலில் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்றபோது இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பறக்கும் ரயில் நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக 15 பேர் கொண்ட சிறப்பு பாதுகாப்பு குழுவை ரயில்வே காவல் துறை நியமித்து உள்ளது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பரபரப்பான நேரங்களில் (Peak Hours) பெண்கள் பெட்டியில் பெண் காவலர்கள்
இன்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை கந்தன்சாவடியைச் சேர்ந்த ப்ரீத்தி (22) என்ற இளம்பெண் கடந்த ஜூலை 2ஆம் தேதி ரயிலில் பயணம் செய்தபோது செல்போன் வழிப்பறி கும்பலால் தள்ளி விடப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் அடையாறு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (19), பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (27) ஆகிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக பறக்கும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 15 பேர் கொண்ட சிறப்பு பாதுகாப்பு குழுவை ரயில்வே காவல் துறை நியமித்து உள்ளது.
உதவி ஆய்வாளர் தலைமையிலான இந்த 15 பேர் கொண்ட காவலர் குழுவில் 10 ஆண் காவலர்களும், ஐந்து பெண் காவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த காவலர் குழுவானது வேளச்சேரி வரை உள்ள 17 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புப் பணியில் இன்று முதல் ஈடுபடுகிறது. இந்த காவலர் குழு குற்றங்களைத் தடுப்பதற்கும், கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படுவார்கள் என தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக பீக் ஹவர்ஸ் என கூறப்படும் காலை, மாலை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை உள்ள பறக்கும் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என ரயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில் பெண் காவலர்கள் பயணம் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பறக்கும் ரயில் நிலையங்களில் குற்றச் சம்பவங்களைக் குறைப்பதற்காக முதற்கட்டமாக இந்த குழு நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், வரும் காலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மக்களின் கூட்டத்திற்கு ஏற்ப கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே காவல் துறை தெரிவித்து உள்ளது.
மேலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோரிக்கை வைத்துள்ள நிலையில், எந்தெந்த ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லையோ அந்த பட்டியலை ரயில்வே நிர்வாகத்திடம் அளித்து உள்ளதாகவும், விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: நயினார் நாகேந்திரன் மகன் செய்த மோசடி பத்திரப்பதிவு ரத்து செய்யப்படுமா? - அறப்போர் இயக்கம் கேள்வி