சென்னை: பேசின் பாலம் அருகே உள்ள பச்சை அம்மன் கோயில் பகுதியல், அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒருவரை தாக்கி அவரிடம் வழிப்பறி செய்ய முயன்றுள்ளனர்.
இதனைக் கண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அங்கு ரத்த காயங்களுடன் இருந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், தாக்கப்பட்ட நபர் கீழ்ப்பாக்கம் புல்லபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (26) என்பதும், இவர் பனந்தோப்பு ரயில்வே காலனியில் உள்ள ரயில்வே காவல் நாய்களை பராமரிப்பதில் உதவியாளராக பணிபுரிவதும் தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சா போதையில் இருந்த அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள், அவரை வழிமறித்து பீர் பாட்டிலால் தலையில் அடித்தும், இரும்புக் கம்பியால் தாக்கியும், அவரிடமிருந்து 4,500 ரூபாய் பணம் மற்றும் 45,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துசென்றது தெரியவந்தது.
மேலும் இது குறித்து வியாசர்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம்- குடிபோதை காரணமா?