சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை ஒரு வழித்தடத்திலும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும் பயன்பாட்டில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.
50-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்று வழித்தடங்களான மாதவரம் முதல் சிறுசேரி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலும் தற்போது 45க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதில் 40 கி.மீ. மேல் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதேபோல், உயர்மட்ட பாதையில், 76-கி.மீ உயர்மட்ட பாதையில், 80 ரயில் நிலையங்களும். மேலும் இந்த வழித்தடங்களில் இரண்டு மெட்ரோ பணிமனையும் அமைக்கபட்டு வருகிறது. இந்த பணிகள் எல்லாம் 2026-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் கட்ட பணிகளுக்காக பல தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரி தற்போது, பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய ரயில்வே துறையின் கட்டுமான பிரிவான ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.1,134 கோடி ஒப்பந்தம் பெறப்பட்டு தற்போது சோழிங்கநல்லூர் - சிப்காட் இடைய 10.கி.மீ உயர் மட்ட பாதை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, தற்போது, ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் 3- வழித்தடங்களில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி ரூ.40,58,19,51,771 கோடி செலவில் 3- வழித்தடங்களில், 12- சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணியை இந்நிறுவனம் தொடங்கி உள்ளது.
இது குறித்து ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிக்காக நிகழாண்டில் ரூ.40,58,19,51,771 கோடி செலவில் 3வழித்தடங்களில், 12 சுரங்க ரயில் நிலையத்திற்கான பாதை அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் இறுதியானது.
இந்த மூன்று வழித்தடத்தில், அதில், 3-ஆவது வழித்தடமான மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில், கே.எம்.சி, சட்ர்லீங் சாலை சந்திப்பு, நுங்கம்பாக்கம், அண்ணா மேம்பாலம் மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய ஐந்து ரயில்நிலையங்களும், மேலும் ராயபேட்டை, சேத்துப்பட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் காற்று வழிக்கு சுவர்கள் (diaphragm wall) அமைக்கும் பணியானது ரூ.1730.59 கோடியில் ஒப்பந்தம் இறுதியானது.
அதேப்போல், பூந்தமல்லி - கடற்கரை வழித்தடத்தில், ராதாகிருஷ்ணன் சாலை, திருமயிலை, மந்தைவெளி, அடையார் சந்திப்பு உள்ளிட்ட 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிக்கு ரூ.1461.97 கோடி செலவில் ஒப்பந்தம் இறுதியானது.
இதேப்போல், 5-ஆவது வழித்தடமான மாதாவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில், அடையாறு டிப்போ, இந்திரா நகர், தரமணி சாலை சந்திப்பு உள்ளிட்ட 3- ரயில் நிலையங்களை அமைக்கும் பணிக்கு ரூ.865-கோடி செலவில் ஒப்பந்தம் இறுதியானது. இந்த ரயில் நிலையங்களில் எல்லாம் காற்று வெளியேறும் சுவர்களும் அமைக்கப்பட உள்ளன.
முதல் கட்டப்பணி தொடக்கம்: தற்போது முதல் கட்டப்பணியானது நடைபெற்று வருகிறது. உயர்மட்ட பாதை அமைக்கும் பணி போல் இல்லை இந்த சுரங்கம் அமைக்கும் பணி. சென்னை நகரில் பல்வேறு பகுதியில், மின்சாரம் கேபிள், குடிநீர் குழாய், போன்றவை பூமிக்குள் செல்கின்றன. இவை சரியான முறையில், வேறு இடத்தில் மாற்ற வேண்டும், மேலும் சுரங்கம் பணியில், பல்வேறு சவால்களை சமாளிக்க வேண்டும்.
மேலும், குறிப்பிட்ட இடங்கள் எல்லாம், போக்குவரத்து அதிகமாக காணப்படும் பகுதிகள். போக்குவரத்து இடையூறு இன்றியும், மேலும் போக்குவரத்து மாற்றம் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேசி வருகிறோம். இந்த பணிகள் எல்லாம் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
உயர்மட்ட பாதை: இதேப்போல், மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில், 10-கி.மீ தொலைவிற்கு உயர்மட்ட பாதை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. 6-மாதங்களுக்கு முன் இந்த பணியானது தொடங்கப்பட்டு தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது” என்றார்.
சுரங்கம் அமைக்கும் பணி: சுரங்கம் அமைக்கும் பணி குறித்து தெரிவித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், “வழித்தடம் 3-இல் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு, இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45 கி.மீ., தூரத்திற்கு இந்த வழித்தடம் அமைகிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 47 ரயில் நிலையங்கள் வருகின்றன. அதில் 19 உயர்மட்ட ரயில் நிலையங்களிலும், மீதமுள்ள 28 ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதை ரயில் நிலையங்களாக அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கான சுரங்கம் தோண்டும் பணி கடந்த அக்டோபரில் தொடங்கியது. இதற்காக நீலகிரி என்று பெயரிடப்பட்ட இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கி 1.4 கி.மீ., நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துள்ளது” என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.