சென்னை: 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, "நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? என்று கூறி மோடி பெயரையும் திருடர்களையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, மோடி குடும்பத்தாரின் சமூக மரியாதை மற்றும் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதற்கு கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்று ராகுல் காந்தி தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நேற்று(மார்ச் 23), ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தண்டனை கிடைத்த சில நிமிடங்களில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் ரயில் மறியல், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்று தீர்ப்பு வந்தவுடன் அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிபோய்விடும் என பரவலாக பேசப்பட்டது. அதன்படியே ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக மக்களவை செயலாளர் அறிவித்தார். நேற்றை தினம் தீர்ப்பு வந்த நிலையில் ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கம் என்பது 'ஜனநாயக படுகொலை' என காங்கிரஸ் ஆதரவு கட்சிகளும், இது சட்டத்தின்படியே நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பாஜகவின் ஆதரவு கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.
ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி, சாதாரண பொதுமக்களாக இருந்தாலும் சரி சட்டம் என்பது அனைவருக்கும் பொருந்தும் என்பதே ஜனநாயகம். ஊர்ஜிதா படுத்தப்பட்ட தீர்ப்பு என்பதால் மக்களவை சபாநாயகர் நீக்கம் செய்துள்ளார். இதை எதிர்த்து ராகுல் காந்தி உயநீதிமன்றம், உச்சநீதிமன்றம் செல்லலாம்" என கூறினார். ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
இதையும் படிங்க: ராகுல் காந்தியின் அடுத்த நகர்வு என்ன.? நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியுமா.?