மறைந்த சரவணா பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணியின் பேத்தி புவனா சரவணன் நடிகர் ராகவா லாரன்சுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “படகோட்டி, பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், குடியிருந்த கோயில், பாலும் பழமும், பாதகாணிக்கை, பாகப்பிரிவினை, பஞ்சவர்ணகிளி, போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் எனது தாத்தா தாத்தா ஜி.என். வேலுமணி.
இன்றைய சூழ்நிலையில் நானும், எனது தாயாரும் மிகவும் கஷ்டமான, மோசமான நிலையில் உள்ளோம். எனது தாயாருக்கு 69 வயது ஆகிறது. ரத்த வாதத்தினால் மிகவும் அவதிப்படுகிறார். தற்சமயம், நாங்கள் கேரளாவில் உள்ளோம். இங்கே எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. தங்குவதற்கு வீடு இல்லாமல், உண்ண உணவு இல்லாமல், மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். நானும், எனது தாயாரும், மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அவதிப்படுகிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள்.
நானும் எனது தாயாரும் எங்களது ஊரான கோபிசெட்டிபாளையத்திற்குச் செல்லவும், தங்குவதற்கு ஒரு வீடும் பெறுவதற்கு உங்களின் உதவியை நாடி இக்கடிதத்தை அனுப்புகிறேன். ஆந்திரவாசிகளை, இதர தேச வாசிகளை அந்தந்த முதல்வர்களிடம் பேசி சொந்த ஊர் அனுப்பி வைத்தீர்கள் என்று பத்திரிகை ஊடகங்களில் பார்த்தேன். கேரளாவில் ஆதரவின்றி தவித்துக் கொண்டுள்ளோம். தயாரிப்பாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கிறோம். நம் முதல்வரிடம் பேசி சொந்த ஊர் அனுப்ப உதவுங்கள். சாப்பாடு கூட இல்லை. தயவுசெய்து கேரளாவில் உள்ள எங்களை மீட்கவும்.
உங்களைத் தவிர எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. எங்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களிடம் கை ஏந்தி மண்டியிட்டு எங்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இவர்களை மீட்டு உதவி செய்யும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.