இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “10.4.2019 அன்று உச்சநீதிமன்றம் ரபேல் ஊழல்பற்றிய வழக்கில் மத்திய அரசு கோரிக்கையை நிராகரித்து வழங்கிய ஆணை, மோடியின் தலைமையிலான பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசுக்கு சரியான பின்னடைவு ஆகும்!
‘‘உண்மை ஒரு நாள் வெளியாகும்; அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்‘’ என்ற பட்டுக்கோட்டையார் கவிதை வரிகளுக்கேற்ப, ரபேல் ஊழல்பற்றி மறுசீராய்வு மனு போட்டு, பேட்டி கொடுத்தவர்கள் பா.ஜ.க. ஆட்சியில் முக்கிய மந்திரிகளாக இருந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
முன்னாள் பா.ஜ.க. நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா, பொதுத் துறை பங்குகளை விற்ற மேனாள் அமைச்சர் அருண்ஷோரி, பிரபல மூத்த வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷன் போன்றோர்கள் என்பது கவனிக்கத்தக்கது!
புலனாய்வு செய்திக் கட்டுரையாக ‘‘இந்து’’ ஏட்டுக் குழுமத்தின் தலைவர் நண்பர் என்.இராம் அவர்கள் பல முக்கிய ஆவணங்களை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டு கட்டுரை எழுதியதை, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால் அவர்கள், அவை திருடப்பட்ட ஆவணங்கள் என்று கூறி, அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று முதல் நாள் கூறி, எழுதியவரின் உறுதி மேலும் ஓங்கவே, மோடி அரசு அஞ்சி பின்வாங்கியதோடு, அந்த ஆவணங்கள் திருடப்பட்ட ஆவணங்கள் அல்ல என்று பின்வாங்கி ‘அந்தர்பல்டி’ அடித்தார்.
இராணுவம் பற்றிய தகவல்களை ரகசியம் - பரம ரகசியம் என்றது ஆளும் தரப்பு; எதிர்தரப்பு வழக்குரைஞர் ஏற்கெனவே அவை வெளியிடப்பட்டது; பயன்படுத்தியவை. அவை ரகசிய ஆவணங்கள் அல்ல; நீதிமன்றங்களில் வைக்கப்படக் கூடாத ஒன்றும் அல்ல என்று கூறினார்.
பிரதமர் மோடி, அம்பானி குழுமத்திற்குத் தனிச் சலுகை காட்டியது எந்த விதத்தில் சரி? அரசுக்குச் சொந்தமான பிரபல, திறமையும், அனுபவமும் வாய்ந்த HAL என்ற இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் என்ற விமானம் கட்டும் பெங்களூரு தொழிற்சாலை புறக்கணிக்கப்பட்டு, ஒரு சில மாதங்கள்கூட, விமானம் கட்டும் தொழிலில் அனுபவம் இல்லாத, மற்ற சில துறைகளில் ‘திவால் கம்பெனியாகி’, நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தனது சகோதரனால் காப்பாற்றப்பட்ட ஒரு அம்பானி சகோதரருக்கு இப்படி ஒரு தனிச் சலுகை; இதில் நேரடியாக பிரதமர் மோடி - வழமைக்கும், சட்ட முறைக்கும், நிர்வாக முறைக்கும் மாறாக, பிரான்ஸ் நாட்டிற்கான முக்கிய பொறுப்பாளர்களிடம் பேசினார் என்பது மேலும் சீர்கேடான சிரிக்கும் உண்மையாகும்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகளும், தி.மு.க.வும் எடுத்து வைத்த வாதங்களுக்கு வரிந்து கட்டிக்கொண்டு பதில் கூறி சமாளித்த இராணுவ அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், அருண்ஜெட்லி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர், உச்சநீதிமன்றத்தின் நிராகரிப்பு நிலைப்பாட்டுக்கு என்ன பதில் கூறுவார்கள்?
அவர்களுடன் ‘‘ஊழலே அறியாத உத்தம புத்திரர்களான’’(?) நமது தமிழகத்து கொத்தடிமை அரசின் முதலமைச்சர், உழவர்களின் ‘உன்னதத் தலைவர்’ எடப்பாடியார் அதிகார ஆணவத்துடன் அப்பாவி 5 மாவட்ட விவசாயிகளின் அழுகுரலையும் பொருட்படுத்தாமல், 10 ஆயிரம் கோடி ரூபாயை 8 வழிச்சாலை என்ற ஒரு திட்டத்திற்குக் கொட்டி, அவசர அவசரமாக நிலங்களைக் கையகப்படுத்தி, காவல்துறையை ஏவல் துறையாக்கி, தானடித்த மூப்பாக தர்பார் நடத்தியதைக் கண்டித்து, எட்டுவழிச் சாலைத் திட்டம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி கையகப்படுத்தாததால் செல்லாது என்று நல்ல தீர்ப்பு வழங்கி, எடப்பாடி அரசின் முதுகெலும்பை முறித்து, ஏழை விவசாயிகள் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரைத் துடைத்து, அவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கியதே - இது ஒன்று போதாதா - வாக்காளர்கள் அந்த டில்லியின் கொத்தடிமை ஆட்சிக்கு விடை கொடுத்து அனுப்பும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு?
எட்டு வழிச்சாலையில் எடப்பாடி அரசு அதிதீவிர ஆர்வம் காட்டியது என்பது உலகறிந்த ஒன்று!
அகம்பாவம், அதிகார ஆணவம் காரணமாக தனது கையில் உள்ள வருமான வரித்துறை, சி.பி.அய். போன்றவைகளை ஏவிவிட்டு, அச்சுறுத்தி, நிபந்தனையற்ற அடிமைகளாக்கி, கூட்டணி போட்டு, சமுகநீதி மண்ணான பெரியாரின் திராவிடப் பூமியில் காலூன்றலாம் என்று காலே இல்லாத, ‘மிஸ்டு கால்’ கட்சியினர் செய்த கூட்டு முயற்சிகளுக்கு, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் பூட்டு போடும் அளவுக்குச் சிறந்த மக்கள் நல நீதித் தீர்ப்புகள் - வரலாற்றுப் பெருமை வாய்ந்த இரு தீர்ப்புகளை வழங்கிவிட்டன!
மீண்டும் உச்சநீதிமன்றத்தில் 8 வழிச்சாலைத் தீர்ப்புக்கு மேல்முறையீடு (அப்பீல்) செய்யவிருக்கிறதாம் எடப்பாடி அரசு!
தமிழக விவசாயிகளே, வாக்காளர்களே! இதை வாக்களிக்கும் முன்பு நினைவில் கொள்க!
தற்கொலை செய்துகொண்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் உருவம் தெரியவேண்டும்.
இவ்விரு மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகளைத் தோற்கடிப்பதுதான் அவர்களுக்கு நீங்கள் செலுத்தும் வீர வணக்கம் என்பதை மறவாதீர்!
இன்னும் 6 நாள்கள்தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.