தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக சென்னையில், நாளுக்கு நாள் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் ராயபுரம், திரு. வி.க. நகர், கோடம்பாக்கம் போன்ற இடங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதன் பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இருப்பினும் நோயின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை மண்டல வாரியாக அதிகாரிகள் தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.
அடையாறு 13ஆவது மண்டலம் மந்தைவெளி ராஜ கிராமணி தோட்டம் நான்காவது தெருவில் கரோனா தடுப்புப் பணிகளை ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கிருந்த மக்களிடம் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதேபோல், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணனும் நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை, கரோனா பாதித்த நோயாளிகளைத் தனிமைப் படுத்துவதற்காக மாற்றும் பணிகளை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.