சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பெயரால் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கு 389 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 171 ஆசிரியர்களுக்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 171 ஆசிரியர்களுக்கு என 342 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
மேலும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் பணியாற்றும் 33 ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் 10 விரிவுரையாளர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இரண்டு பேர் என மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளன.
சிறப்பாக பணிபுரிந்த 389 ஆசிரியர்களுக்கான ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (செப்.3) ஐந்து ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறார். கரோனா தொற்று பரவல் காரணமாக அந்ததந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் விருதுகளை வழங்குகின்றனர்.
சென்னையில் 15 ஆசிரியர்கள்
சென்னை மாவட்டத்தில் இருந்து 15 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஹேமலதா, செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், சர்எம்சிடி முத்தையா செட்டியார் மேல்நிலைப் பள்ளி விலங்கியல் ஆசிரியர் செளந்தரபாண்டியன், கொடுங்கையூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை சுகுணா, மேற்கு மாம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி வணிகவியல் ஆசிரியை வெண்ணிலா, திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெகநாதன், அண்ணாசாலை அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முனுசாமி உள்ளிட்ட 15 பேர் விருதுகளைப் பெறுகின்றனர்.
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறார் ஸ்டாலின்