சென்னை தி. நகரிலிருந்து ஆதம்பாக்கம் நோக்கிச் செல்லும் மாநகரப் பேருந்து எம் 9 எம். இப்பேருந்து நேற்று இரவு (நவ. 09) ஆதம்பாக்கம் நோக்கிப் பேருந்து சென்றபோது கிண்டி மேம்பாலத்தில் இறங்கி ரேஸ்கோர்ஸ் சாலையில் சென்றது. அப்போது இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் பேருந்து ஓட்டுநர் விபத்தை தடுப்பதற்கு முயன்றுள்ளார்.
இருப்பினும் கட்டுப்பாட்டை மீறி பேருந்து ரேஸ் கிளப் வளாகத்தில் உள்ளே வேகமாக நுழைந்தது. இதில் நுழைவாயிலில் பணியில் இருந்த கோபாலபுரத்தைச் சேர்ந்த பாதுகாவலர் நெல்சன் மீது பேருந்து மோதி, தலையில் படுகாயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் நெல்சனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இருப்பினும் அவர் கொண்டுசெல்லும் பாதி வழியிலேயே உயிரிழந்தார். அவரின் உடல் தற்போது ராஜிவ்காந்தி மருத்துவமனையில் உள்ளது.
பிறகு தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் சத்தியாதரனை கைது செய்தனர்.
இவர் மீது 279 (பொது இடத்தில் அஜாக்கிரைதையாக, அதிவேககமாக வாகனத்தை ஓட்டுதல்), 304 (கொலையாகாத மரணத்தை விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.