ஜூன் 5ஆம் தேதி காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் 125ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்துவார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்களின் நலன் கருதி, கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்தில், ஊரடங்கு உத்தரவு வருகின்ற ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவினை கடுமையாக கடைப்பிடிக்க, பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. நினைவிடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் கூடாமல் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். எனவே, பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஏழை மக்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.1,323 கோடியை திரும்ப அளிக்க ஆணை!