தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மக்கள் பயன்பாட்டிற்கு தடை இல்லாமல் மின்சாரம் வழங்கக் கூடிய ஒரு நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்.
1957ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாக்கப்பட்டு புதிய பொருளாதாரக் கொள்கை விளக்கத்தின் அடிப்படையில், மின்சார சட்டம் 2003 அடிப்படையிலும், 2010 ஆம் ஆண்டு டிஎன்இபி லிமிடெட் என்ற நிறுவனமும், அதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என்று இரு பகுதிகளும் உருவாக்கப்பட்டது.
மின் உற்பத்தி செய்கின்ற பணிகளும், அதேபோல மின் விநியோகத்தை செய்கின்ற பணிகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் (tangedco), துணை மின்நிலைய பராமரிப்பு பணிகளையும், மின்சாரத்தைக் கொண்டு செல்ல மின் தொடரமைப்பு கழகம் என இரண்டு அமைப்புகள் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயல்பட்டு வருகின்றது.
முக்கியமாகச் சொல்ல வேண்டுமெனில் உற்பத்தியாகின்ற மின்சாரத்தை துணை மின் நிலையங்கள் வாயிலாக மக்களிடத்தில் கொண்டு செல்கின்ற ஒரு மகத்தான பணி என்பதை டான் ஜெட்கோ செய்து கொண்டிருக்கின்றது.
அவ்வாறு செய்கின்ற பொழுது, இன்றைக்கு தமிழ் மக்களுடைய மொத்த தேவைகளை பூர்த்தி செய்கின்ற பணி என்பதும் இதற்கு இருக்கிறது. தங்கு தடை இல்லா மின்சாரம், தரமான மின்சாரம் என்ற முறையில் அந்த லட்சியத்தை அடைய வேண்டிய பணி இருக்கிறது.
ஆனால், இப்படிப்பட்ட துணை மின்நிலையங்கள் இன்றைக்கு தமிழ்நாடு அரசினுடைய மின்சார வாரியத்தில், புதிதாக போதிய பணியாளர்களை நிரப்பபடாமல் உள்ளது. அதன் விளைவு இன்றைக்கு மின் விபத்துகள் ஏற்பட்டு, மின் சாதனங்கள் பழுதடைய கூடிய நிலை உருவாகியுள்ளது.
அதேசமயம் பல லட்சக்கணக்கான வருமானமுள்ள மின்மாற்றிகள், உயர்ரக மின்மாற்றிகளில் பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மின் கோபுரங்களில் மின் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் செய்கின்ற பணி சர்க்கஸ் வீரர்களைப் போல பணியாற்றுகின்றனர்.
அவர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம், மின்சார சட்டம் 2010 அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
அவற்றை முறைப்படுத்துவதற்குள் மத்திய மின்சார சட்ட வரைவு 2020 க்கு முன்பாகவே, மின்சார வாரியம் தன்னுடைய துணை மின் நிலையங்களில் அவுட்சோர்சிங் முறையைப் புகுத்துவதற்கு ஆண்டொன்றுக்கு 95 லட்சம் ரூபாய் என்ற முறையில் ஏற்பாட்டை செய்துகொண்டிருக்கின்றது.
இது ஊழலுக்கு வழிவகுப்பதோடு, தொழிலாளர்களுடைய பதவி உயர்வு, அலுவலரின் உள்ளிட்டிரின் உரிமைகளை பறிக்கின்ற செயலாக உள்ளது என தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தமிழ்நாட்டிலுள்ள இரண்டு துணை மின்நிலையங்களான விழுப்புரத்திலுள்ள சங்கராபுரம், மதுரையிலுள்ள சமயநல்லூர் ஆகிய இரண்டு துணை மின் நிலையங்களை ( 230 கிலோ வாட் ) அவுட்சோர்சிங் மூலம் தனியாருக்கு தாரைவார்க்கும் ஏற்பாடுகளை மின் வாரியம் உத்தரவாக வெளியிட்டிருக்கிறது.
அதற்கு ஆண்டொன்றுக்கு 95 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டாலும், உண்மையில் அங்கு பணியாற்றுகின்ற 4 உதவி செயற்பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், உள்ளிட்ட ஆய்வாளர்கள் போன்ற பணிகள் இன்றைக்கும் நிறப்பப்படாமலே உள்ளது.
ஆனால் தனியாருக்கு வழங்கப்பட்டால் அங்கே இருக்கின்ற தனியார் முதலாளிகள் மின்சாரப் பணியை அவர்கள் குறைந்த சம்பளத்தில் ஆட்களை வைத்துக்கொண்டு முறையான மின்சாரத்தை மக்களுக்கு கொண்டுசெல்வார்களா? என்பது கேள்விக்குறி ஆகிவிடும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளோம்.
தமிழ்நாடு அரசின் அரசாணை 950-படி தடை செய்யப்பட்ட பகுதிகளான மின்மாற்றி பராமரிப்பு உள்ளிட்ட இடங்களில் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்பதற்கு எதிராக மின் வாரியம் செயல்படுகிறது. ஆனால் அதையும் மீறி இன்றைக்கே தனியாரை இந்த துணை மின் நிலையங்களில் விடுவதற்கு மின்சார வாரியம் நிர்வாகம் வேகமாக செயல்பட்டு வருகின்றன. இதன் நோக்கம் மத்திய மின்சாரச் சட்ட திருத்த மசோதா 2020 ஐ ஆதரிப்பதாக அமைந்துள்ளது என்கிறார் தமிழ்நாடு மின் வாரிய மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் சென்னையில் மட்டுமே 400கிலோ வாட், 240 கிலோ வாட் உள்பட மொத்தம் 25 துணை மின் நிலையங்கள் இருக்கின்றன. அவற்றில் போதிய பாதுகாப்பு வசதிகளாக தீயணைப்பு கருவிகள், எர்த் ராடுகள் பயன்படுத்துதல், 24 மணி நேரமும் உதவி பொறியாளர் மற்றும் போர் மேன் எனப்படும் அலுவலர்களின் கண்காணிப்பு ஆகிய செயல்படுத்தப்பட்டு, பாதுக்காப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என மின் வாரியத்தில் கூறப்பட்டாலும்.,
தமிழ்நாடு முழுவதும் சராசரியாக பதினைந்து நாட்களில் ஒரு மின் ஊழியர் இறப்பு என்பது நிகழ்ந்து வருவது, மின் வாரிய ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததையே இது காட்டுகிறது. இவற்றை சரி செய்ய ஏற்கனவே மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்துவதுடன், ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள 42 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப மின் வாரியம் முன் வந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மின் வாரியத்தில் பாதுகாப்பான நிலையும், மின் விநியோகம் செய்யப்படும் துணை மின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்ய முடியும் என்று ஒட்டுமொத்த மின் வாரிய ஊழியர்களும் குறிப்பிடுகின்றனர்.
இதையும் படிங்க:'செயல்படாத கடைகளுக்கு உரிமம் புதுப்பிப்பா?' - கடை உரிமையாளர்கள் வேதனை