சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக குடிநீர் தண்ணீர் பருகிய அப்பகுதி கிராமவாசிகள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மருத்துவமனை அறிக்கைப்படி குடிநீர் தொட்டியை சோதனை செய்தபோது, குடிநீர் தொட்டியில் மலம் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் உடனடியாக விசாரணையை மேற்கொண்டனர். இதனிடையே ஏடிஎஸ்பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால், இதுவரை எந்த குற்றவாளியும் கைது செய்யப்பட வில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்திலும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுவையும் அளித்து இருந்தனர். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "ஆளுநரை வைத்து பிரிவினையை ஏற்படுத்த திமுக அரசு முயற்சி" - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!