இதுகுறித்து சென்னை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவராகவும், அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராகவும் சிறப்பாக செயல்பட்டவர் மருத்துவர் எஸ்.முஜிபூர் ரஹ்மான்.
கரோனா காலத்திலும் தனது மருத்துவப் பணியை தொடர்ந்து செய்துவந்தவர். கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். நேற்றிரவு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இறப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ரஷ்யாவில் இளநிலை மருத்துவப் படிப்பை படித்தவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவத்தில் பட்டயப் படிப்பை முடித்தவர். ஏழை எளிய மக்களின்பால் மிகுந்த அக்கறையும், கரிசனமும் கொண்டவர். எல்லோரிடமும் இன்முகத்துடன் பழகக்கூடியவர். பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு போராடியவர். நீட் தேர்வு, இட ஒதுக்கீடு, சுற்றுச்சூழல், மருத்துவப் பிரச்னைகள் தொடர்பான பல்வேறு கருத்தரங்குகளை முன்நின்று நடத்தியவர். அவரது இறப்பு, ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரை பிரிந்து வாடும் அவரது துணைவியார், இரு மகள்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர் எஸ்.முஜிபூர் ரஹ்மானுக்கு இதர மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் குடும்பத்திற்கும் உடனடியாக தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் நிவாரண உதவியை வழங்கிட வேண்டும். மத்திய அரசும் தனது காப்பீட்டிலிருந்து ரூ.50 லட்சத்தை வழங்கிட வேண்டும். அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் ராணுவ மருத்தவருக்கு கரோனா பாதிப்பு