புதுச்சேரி: 2022-2023ம் ஆண்டிற்கான ரூ.10,696 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை, முதலமைச்சரும், நிதியமைச்சருமான ரங்கசாமி, புதுச்சேரி சட்டபேரவையில் இன்று (ஆகஸ்ட் 22) தாக்கல் செய்தார். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறும்.
பட்ஜெட்டில், மாநிலத்தில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும் என்று கூறிய ரங்கசாமி, காரைக்காலில் ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும், புதிதாக 4 சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என்றும், அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத 21 வயது முதல் 57 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்ப தலைவிக்கு தலா 1000 ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும், புதுச்சேரியில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் எனவும், ஒன்பதாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு மிதிவண்டி மீண்டும் வழங்கப்படும் எனவும், மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள், சீருடை, மதிய உணவு போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் பொலிவுரு வகுப்புகளாக மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தொடர்ந்து, உர விற்பனை அதிகரிக்க காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்கப்படும் என்றும், மரச்செக்கு எண்ணெய் தயாரித்து வழங்கவும், தனியார் பங்களிப்புடன் மீண்டும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை செயல்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
இதையும் படிங்க: விதிமுறைகளை மீறி கட்டும் கட்டடங்கள் சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை