புதுச்சேரியில் 351 நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 650 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு வருடமாக ஊதியம் சரியாக வழங்கப்படவில்லை என்றும் நியாய விலைக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகவும் பல கட்டப் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் தங்களது அலுவலகத்தில் திரண்டனர். அப்போது, ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "கரோனா தடுப்பு நடவடிக்கையில் புதுச்சேரி அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நேரத்தில் சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க முடிவெடுத்தது.
அதனை ரேஷன் கடைகள் மூலம் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அரசு செவி சாய்க்காமல் தவிர்த்துவிட்டு பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூலம் இலவச அரிசி விநியோகம் செய்தது.
தற்போது, மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கவுள்ள இலவச அரிசியை எங்கள் மூலம் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் எங்கள் மூலம் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் அரிசி வழங்கத் தவறும்பட்சத்தில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் ஒப்படைத்துவிடுவோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ரேஷன் பொருட்களை தகுந்த இடைவெளியுடன் வாங்கிய திருவாரூர் மக்கள்!