சென்னை: தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ்நாட்டில் கரோனா 3ஆவது அலை பரவி வருகிறது. இதனால் பணியிடங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை சுகாதாரத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.
சமூக இடைவெளி
தொழிற்சாலை மற்றும் வேலை செய்யும் இடங்களில் தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.
தொழிலாளர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம், உடல் வலி, வாசனை இழப்பு மற்றும் சுவை இழப்பு ஆகிய கரோனா நோய்த்தொற்று தொடர்பான அறிகுறிகள் இருக்கிறதா என்று தொழிலாளர்களிடம் கேட்க வேண்டும்.
உடல் வெப்பநிலை
கடந்த ஒரு வாரத்தில் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா நோய்த்தொற்று தொடர்பான அறிகுறிகள் இருந்தால் தொழிலாளர்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பணியாளர்களின் உடல் வெப்பநிலை 99 டிகிரிக்கு அல்லது 37 டிகிரிக்கு அல்லது அதற்கு மேல் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
99 டிகிரிக்கு அல்லது 37 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட உடல் வெப்பநிலை உள்ள ஊழியர்களை தொழிற்சாலை வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது.
முகக்கவசம்
தொழிற்சாலை வளாகத்திற்குள் வரும் தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
நுழைவு வாயிலில் உள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அல்லது சிசிடிவி மூலம் தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதிபடுத்த வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்கக் கூடாது.
தடுப்பு ஏற்பாடு
மேலும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
இரண்டு பணியாளர்களுக்கு இடையில் 2 மீட்டர் தூரம் இடைவெளி இருக்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் சமூக இடைவெளி சாத்தியமில்லையென்றால் வெளிப்படையான தாள்கள், திரைகளுடன் தடுப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
கூட்டமாக செல்லக் கூடாது
ஓய்வு நேரம், தேநீர் இடைவேளை போன்ற நேரங்களில் ஓய்வு அறையை பயன்படுத்தும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
ஓய்வு அறைக்கு செல்லும் போது தொழிலாளர்கள் கூட்டமாக செல்லக் கூடாது. தொழிற்சாலையின் அனைத்து பகுதிகளிலும் கை கழுவும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கை கழுவுதல் வசதி போதுமானதாக இல்லையெனில், நிர்வாகம் தற்காலிகமாக கை கழுவும் வசதிகளை அமைக்க வேண்டும்.
மேலும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் நேரங்களுக்கு இடையில் வழங்கப்படும் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் திறந்த வெளியில் வழங்கப்படலாம்.
அவ்வாறு திறந்த வெளியில் வழங்கப்படுவதன் மூலம் தொழிலாளார்கள் கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்க முடியும்.
கிருமி நாசினி
பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும். பேருந்துகளில் நுழையும் போது கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பேருந்துகளில் அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்து காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
பேருந்துகளில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கை
தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் பொறுப்பாளர்களை நியமித்து கரோனா நோய்த்தொற்றுப் பரவாமல் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தொழிலாளர்களுக்கு கரோனா நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கரோனா தடுப்பூசி
தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் கரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்தி இருக்க வேண்டும்.
300 பேருக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது 10,000 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும். கரோனா தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெய்பீம் திரைப்படத்திற்கு மற்றுமொரு மகுடம்! என்னவா இருக்கும்?