சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இந்தப் பணிக்கு ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு அக்டோபர் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு 2019இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் 2020 ஜனவரி 22ஆம் தேதிமுதல் பதிவேற்றம் செய்திடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினிவழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அக்டோபர் மாதம் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. கணினிவழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கான அனுமதிச்சீட்டு விரைவில் வெளியிடப்படும். இந்தத் தேதிகள் கரோனா பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை, நிர்வாக வதியினைப் பொறுத்த மாறுதலுக்குள்பட்டது.
அக்டோபர் 28ஆம் தேதி காலையில் கணினி அறிவியல் இன்ஜினியரிங், பிரிண்டிங் தொழில்நுட்பம், மாலையில் இயற்பியல், தகவல் தொழில்நுட்பம், மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ். அக்டோபர் 29ஆம் தேதி காலையில் கணக்கு, புரொடக்ஷன் இன்ஜினியரிங், மாலையில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலாஜி.
அக்டோபர் 30ஆம் தேதி காலையில் இன்ஸ்ட்மென்டேஷன் அண்டு கன்ட்ரோல் இன்ஜினியரிங், மாலையில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங். அக்டோபர் 31ஆம் தேதி மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மாலையில் வேதியியல், ஆங்கிலம் ஆகிய தேர்வுகள் நடைபெறும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது - அமைச்சர் அன்பில் பொய்யாமொழி