இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், கரோனா நோய் தொற்று காரணமாக பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிமுறைகளின் படி பருவ தேர்வு நடத்துவது குறித்து வழிமுறைகளை வகுக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. தற்போது, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முதலமைச்சர் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இறுதிப் பருவத் தேர்வுகளை தவிர பிற பருவ பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
அதன்படி, இறுதி பருவத் தேர்வுகளை தவிர பிற பருவ பாடங்களில் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிடுகிறது.
மாணவர்களுக்கான மதிப்பெண்களை வழங்குவதற்கான வழிமுறைகளையும் அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30 விழுக்காடும், இந்தப் பருவத்தில் அகமதிப்பீடு அல்லது தொடர்ச்சியான அகமதிப்பீட்டிலிருந்து 70 விழுக்காடு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்து 100 விழுக்காடு மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மை பாடங்களுக்கும், மொழிப் பாடங்களுக்கும் மதிப்பெண்கள் அளிக்க வேண்டும்.
துணைப்பாடங்கள், விருப்பப் பாடங்களுக்கு 100 விழுக்காடாக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்க வேண்டும். செய்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வகப் பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் தொலைதூரக் கல்வியை பொறுத்தவரை மேற்கண்ட நடைமுறை பின்பற்றப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.