கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அடுத்தக்கட்ட முடிவு எடுப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கரோனா வைரஸ் நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில், அடுத்தக்கட்டமாக ஊரடங்கு விலக்கப்படலாமா, இல்லை சில தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்படுமா என பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரும் 31ஆம் தேதியுடன் 4ஆம் கட்ட ஊடங்கு நிறைவடையும் நிலையில், ஜூன் மாதம் முதல் வெளி மாவட்டங்களுக்கு, வெளி மாநிலங்களுக்கு பேருந்து இயக்கப்படுமா, உள்ளூர் பேருந்துகள் இயக்க வாய்ப்புள்ளதா, புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுமா என்பது போன்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.
ஒருபுறம் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 11 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பாதிப்பு சற்று கட்டுக்குள் வந்தாலும் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதைப் போல இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பும் போட்டி போட்டுக்கொண்டு அதிகரித்து வருகிறது.
பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பொதுப் போக்குவரத்து இன்றியமையாததாகிறது. குறிப்பாக சென்னையில் நிபந்தனைகளுடன் மாநகரப் பேருந்து சேவை, ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்டவை இயங்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அதே நேரத்தில் பொதுபோக்கு தொடங்கப்பட்டால் ஓரிடத்தில் இருந்து மக்கள் மற்றொரு இடத்துக்குச் செல்ல தொடங்குவர் என்பதால் தொற்று அதிக அளவில் பரவும் என பொது சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனப்படையிலே டெல்லி ஐசிஎம்ஆர் குழு பரிந்துரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து தொடங்குவதற்கான சாத்தியம் மிகவும் குறைந்த அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.